பரிசேயர் – ஆயக்காரரை இயேசு உவமானமாகக் கூறியது தன்னைத் தானே நீதிமானாக உயர்த்திக் கொண்டவனுக்கும் வெறுக்கப்படுகிற பாவிக்கும் இடையிலான முரண்பாட்டுக்கும் மேலான உபதேசமாகும். இது அவர்களின் மனோசுபாவத்தைக் காட்டுகிறது. குறிப்பாக தங்கள் ஜெபம் மற்றும் தேவனை அணுகும் முரண்பாடான மனோசுபாவத்தைக் காட்டுகிறது. இருவரின் ஜெபங்களையும் நுணுகி ஆராய்ந்து பார்த்தால், தேவனை அவர்கள் அணுகும் விதமும் ஜெபத்தின் பாவனையும் மாறுபட்டிருப்பதை உணரலாம். பரிசேயன் ஆயக்காரனையும் பிற பாவிகளையும் தன்னோடு ஒப்பிடுவதன் மூலம் தன்னைத் தானே உயர்த்துகிறான். தான் ஒரு நீதிமான் என்று கருதி, தன்னைத் தானே துதித்துப் பாடுகிறான். தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதும் தேவ சமூகத்தில் நிற்பதற்குத் தானாகவே தகுதிப் படுத்திக் கொள்வதும் அந்த ஜெபத்தில் காணப்படுகிறது. தேவனின் வார்த்தைக்குச் செவி சாய்க்க தான் சித்தமாய் இல்லை என்று வெளிப்படுத்துகிறான். மறு பக்கமோ, ஆயக்காரன் தன் உள்ள ஆழத்தில் இருந்து மனங் கசந்து, தன் பாவத்தை அறிக்கை செய்து, தேவ கிருபைக்காக மன்றாடும் வகையில் ஜெபிக்கிறான். இது அடக்கத்தின் வெளிப்பாடு. தேவன் தமது கிருபையையும் அன்பையும் வெளிப்படுத்தத் தேவைப்படும் இறைஞ்சல்.
இந்த ஆயக்காரனின் தாழ்மையான ஜெபமே தேவ உறுவுக்குப் பாத்திரமானது என்று இயேசு பறை சாற்றுகிறார். தற்பெருமையின் நிமித்தம் பரிசேயனின் ஜெபம் நிராகரிக்கப்பட்டது. நமது உத்தமமும் நற்கீர்த்தியும் அல்ல; நமது பாவத்தைக் குறித்த எச்சரிக்கை உணர்வே தேவ கிருபையைக் கிட்டிச் சேர்க்கிறது.
தியானிக்கும் தருணம்
தேவனுக்கு முன்பாக ஜெபிக்க வரும் போது நமது மன சுபாவம் என்ன? நமது சொந்த ஜெபத்தையே நாம் கேட்கிறோமா?