பெண்கள் ஆண்களுக்கு சமமாக இன்றைக்கு கல்வி வேலை வாய்ப்பில் பல்வேறு தொழில்நுட்ப காரியங்களில் முன்னேறியிருக்கலாம். ஆனால் சம உரிமை மட்டும் கிடைத்தபாடில்லை. இந்த நவீன காலத்திலும் பெண்களை கைநீட்டி அடித்து துன்புறுத்தும் பையன்கள் இருக்கிறார்கள். ஒரு பெண் தாயாக மனைவியாக மகளாக தான் சுழலும் எல்லா நிலையிலும் துன்புறுத்தப்படுகிறாள். முக்கியமாக இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் பெண்ணானவள் அடிமைபோல் நடத்தப்பட்டு உடல்ரீதியாக துன்புறுத்தப்படுதல் எந்த வகையிலும் சகிக்கமுடியாத ஒன்றாகும். இதனை சகோதரிகள் தீவிரமாக எதிர்க்கவேண்டும். வேலைக்கு செல்லாமல் வருமானமில்லாமல் குடிபோதையில் கள்ளத் தொடர்பில் இருக்கும் புருஷனானவன் மனைவி தட்டிக் கேட்டால் அவளை வாயாடி என்பதும் அடித்து துன்புறுத்துவதும் சகஜமாகிவிட்டது.
இதனை உடனே பெண்கள் நிறுத்தமுடியும். அருகிலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் சென்று முறையிட்டால் போதும். யாராகிலும் ஒரு புண்ணியவான் புண்ணியவதியின் மூலம் நல்ல தீர்வுகள் கிடைக்க வாய்ப்புண்டு. எதுவும் இல்லாவிட்டால் இருந்த இடத்திலிருந்தே அவசர உதவிக்கான காவல் எண்களை அழைக்கலாம். கிறிஸ்தவர்கள் பொதுவாக சட்ட உதவிகளை நாடாமல் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்று ஜெபம் மட்டுமே செய்துவருவதால் எந்த பலனும் இல்லை என்பதையே சமுதாய நிலவரம் காண்பிக்கிறது. போலீஸ் என்றாலே லஞ்சம் வாங்குவார்கள், காசுவாங்கிக் கொண்டு நீதி வழங்காதிருப்பார்கள் என்ற எண்ணம் தவறானதாகும். சமுதாயத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் காவல்துறையினரும் நம்மிலிருந்து சென்றவர்களே என்பதையும் மறவாதிருப்போம்.
ஒரு பெண், வேலைபார்க்குமிடத்தில் சரியாய் வேலை பார்க்காததற்காக அவளை யாரும் அடிக்கமாட்டார்கள். கட்டிய புருஷன் அடிப்பது என்பது வலி மட்டுமல்ல, தீராத அவமானமாகும். அதனைப் பார்க்கும் பிள்ளைகளின் மனதும் அதினால் பாதிக்கப்படும். எனவே இல்லத்தரசிகள் இந்த காரியத்தில் தயங்காமல் சட்ட உதவியை நாடவேண்டும். அண்மையில் எனது ஆலோசனையைக் கேட்டு அவ்வாறே செய்த பெண்ணுக்கு உரிய நீதி கிடைத்திருக்கிறது. மாறாக அவளுக்கு நான் ஆண்டவர் பெயரால் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஜெபிக்கிறேன் என்று சொல்லுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. மேலும் அவளே நம்புவதைப் போல் செய்வினை ஏவல் போன்றவற்றையும் எவளோ வசியம் செய்துவைத்திருக்கிறாள் என்பதைப் போன்ற மூடநம்பிக்கைகளையும் வளர்த்துவிடுவதில் எனக்கு பிரியமில்லை.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)